×

புகார் அளிக்க சென்ற டாஸ்மாக் ஊழியர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்

சென்னை: கொள்ளை தொடர்பாக புகார் கொடுக்க காவல்நிலையம் சென்ற ஊழியர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்க மாநில தலைவர் கு.பால்பாண்டியன் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தாலுகா அரியாவூருக்கு அருகில் ஒத்தக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றி வருபவர்கள் மணிவேலு, தமிழரசன். இதேகடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றுபவர் குணசேகரன், இவர்கள் மூன்று பேரும் கடந்த மாதம் 28ம் தேதி கடையை அடைத்து விட்டு விற்பனை தொகை ₹ 1 லட்சத்து 77 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆயுதங்களை எடுத்து கொண்டு மர்ம கும்பல் ஒன்று இவர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து, 29ம் தேதி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் இவர்கள் மூவரையும் போலீசார் விசாரனைக்கு அழைத்ததையடுத்து இவர்கள் விசாரணைக்கு சென்றனர். இதில் மணிவேலுவை மட்டும் அனுப்பிவிட்டு இருவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி தாங்கள் தான் பணத்தை திருடி விட்டதாக ஒப்புக்கொள்ளுமாறு அடித்துள்ளனர். இவர்கள் இருவரும் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் இன்று அல்லது நாளை போராட்டத்தை நடத்த உள்ளனர். சமீப காலமாக புகார் தெரிவிக்க வரும் ஊழியர்களை காவல்துறையினர் குற்றவாளி போல் நடத்துவது தொடர்கதையாகிவிட்டது. குற்றவாளிகளை கண்டிபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பணத்தை திருடிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்திய போலீசார் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  இதுகுறித்த மனுவை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் காவல்துறை தலைவருக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmak employees, police attack
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...